×

ராசிபுரத்தில் ₹30 கோடியில் மினி டைடல் பார்க்

நாமக்கல், செப்.3: இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், ராசிபுரத்தில் ₹30 கோடி மதிப்பில் மினி டைடல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பாச்சல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, நாமக்கல் ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தன. மேலும், 1500க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, தொழிற்சாலைகளை தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில், சென்னையில் டைடல் பார்க் தொடங்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ராசிபுரத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில், ₹30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண் கல்வியை ஊக்குவிக்க மாதம் ₹1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவ, மாணவிகள் கல்வி இடைநிற்றலை தவிர்க்க, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முகாமில் கலந்து கொண்டு பணி வாய்ப்பு பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஞானமணி கல்லூரி தலைவர் அரங்கண்ணல், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநர் லதா, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராசிபுரத்தில் ₹30 கோடியில் மினி டைடல் பார்க் appeared first on Dinakaran.

Tags : tidal ,Rasipuram ,Namakkal ,mini tidal park ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...